வாக்கு எண்ணும் மையம் ஆய்வு

Share others

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையத்தை நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பொதுபார்வையாளர் அபுபக்கர் சித்திக், காவல் பொதுபார்வையாளர் சுபாஷ் சந்திர துபே, ஆகியோர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு தெரிவிக்கையில்-
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 23 அன்று பொதுத்தேர்தல் நடைபெறுவதையொட்டி பல்வேறு முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
அதன்ஒருபகுதியாக நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டு வரும் வாக்கு எண்ணும் மையம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, கோணம் பொறியியல் கல்லூரியின் கீழ் தளத்தில் 229 கன்னியாகுமரி மற்றும் 234 கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமும், முதல் தளத்தில் 231 குளச்சல் மற்றும் 232 பத்மநாபபுரம், 233 விளவங்கோடு சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமும், இரண்டாம் தளத்தில் 230 நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி வாக்கு எண்ணும் மையமும் அமைக்கப்பட உள்ளது. அந்தந்த வாக்கு எண்ணும் மையங்களின் அருகாமையில் வாக்கு எண்ணும் இயந்திரங்கள் பாதுகாப்பு வைப்பறை அமைக்கப்பட உள்ளது.
தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வரிசை எண்கள் அமைத்து வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசைப்படுத்தி வைப்பதற்கான பணிகள் மற்றும் வாக்கு எண்ணும் அறைகளில் வாக்கு எண்ணிக்கையின்போது முகவர்கள் வாக்கு எண்ணிக்கையை பார்வையிட ஏதுவாக பாதுகாப்பு தடுப்புகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும், சிசிடிவி செயல்பாடுகளையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப்பெட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கான அறை வாக்கு எண்ணும் மையங்களில் தடுப்புகள் அமைக்கும் வசதி, தடையில்லா மின்சார வசதி, ஜெனரேட்டர் வசதி, தேர்தல் பார்வையாளர்கள் அறை, தேர்தல் நடத்தும் அலுவலரின் அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, கணினி அறை, இணையதள மற்றும் கணினி வசதியுடன் கூடிய ஊடக மைய அறை, மருத்துவக்குழுவினருடன் மருத்துவ அறை, சுகாதாரமான குடிநீர் வசதி, கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை சுமூகமாக நடைபெற அனைத்து துறை அலுவலர்கள் பணியாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியாளர் அழகுமீனா தெரிவித்தார்.
நடைபெற்ற ஆய்வுகளில் நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் காளீஸ்வரி, துறை அலுவலர்கள், பணியாளர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.


Share others

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *