இந்தியா அஞ்சல் துறை கியான் போஸ்ட் என்ற புதிய அஞ்சல் சேவையை அறிமுகம் செய்து உள்ளது. இந்த புதிய சேவையானது பல்வேறு துறைகளில் அறிவு சார்ந்த புத்தகங்களை தடையின்றி பரிமாற்றம் செய்வதை நோக்கமாக கொண்டு உள்ளது. இந்த புதிய சேவையானது மே 1, 2025 முதல் குமரி மாவட்டத்தின் அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் அமலுக்கு வந்து உள்ளது.
கியான் போஸ்ட் சேவையானது சமூக கலாச்சார மற்றும் மதம் சார்ந்த புத்தகங்கள் மற்றும் இலக்கியங்களை சலுகை விலையில் அனுப்புவதற்கு ஏற்ற நம்பகமான மற்றும் திறமையான சேவையை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த சேவையானது பொதுமக்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் அஞ்சல் அலுவலகங்கள் மூலம் குறிப்பிட்ட புத்தகங்கள் மற்றும் ஆய்வு சார்ந்த புத்தகங்களை அனுப்புவதற்கு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
புதிய சேவையான கியான் போஸ்டின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு –
• இந்திய அஞ்சல் துறையின் ஆன்லைன் கண்காணிப்பு சேவையை பயன்படுத்தி பொருளை கண்காணித்து கண்டறியலாம்.
• குறிப்பிட்ட முகவரியில் பட்டுவாடா செய்யப்படும்
• கோரிக்கையின் பெயரில் பட்டுவாடா செய்ததற்கான சான்று வழங்கப்படும்
• அதிகபட்ச எடை அளவு 5 கிலோ
பரிமாற்றத்திற்கான நிபந்தனைகள் –
• சீரான இடைவெளியில் வெளியிடப்படும் பிரசுரமாக இருக்கக் கூடாது.
• விளக்க இதழ்கள் மற்றும் அது போன்ற வெளியீடுகள் அனுப்ப இயலாது
• புத்தகங்களின் வெளிப்புறத்தில் கியான் போஸ்ட் என்று குறிப்பிட்டு இருக்க வேண்டும்
• புத்தகங்கள் தற்செயலான அறிவிப்புகள் அல்லது புத்தகங்களின் பட்டியலை தவிர வேறு எந்த விளம்பரங்களையும் கொண்டிருக்கக் கூடாது
• புத்தகங்கள் வெளியீட்டாளரின் பெயரைக் கொண்டிருக்க வேண்டும்.
• வணிகம் சார்ந்த புத்தகங்கள் இதன் மூலம் அனுப்பப்படாது
• அனுப்பப்படும் பதிவுகள் அனுப்புனர் முகவரி மற்றும் பெறுநர் முகவரியை கொண்டிருக்க வேண்டும் மற்றும் அஞ்சல் அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்பட்டது.
• கடிதம் அல்லது தனிப்பட்ட தகவல் தொடர்பு தன்மையை கொண்ட எந்த தொடர்பும் கியான் போஸ்ட் பிரதியில் இணைக்கப்படவோ அல்லது எழுதப்படவோ கூடாது
பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் இந்திய அஞ்சல் துறையின் இந்த புதிய சேவையான கியான் போஸ்ட் சேவையை அருகில் உள்ள எந்த ஒரு தலைமை மற்றும் துணை அஞ்சலகங்களை அணுகி பயன்பெறுமாறு கன்னியாகுமரி மாவட்ட அஞ்சல் துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார் தனது செய்து குறிப்பில் தெரிவித்து உள்ளார்.