கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள்
மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு
வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவு வழங்கும்
திட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி
மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,
பறக்கை அரசு நடுநிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டு, குழந்தைகளிடம்
முதலமைச்சரின் காலை உணவு குறித்து கேட்டறிந்து தெரிவிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும்
மாணவ, மாணவியர்களின் நலனை கருத்தில்கொண்டு, தமிழ்நாட்டிற்கு உட்பட்ட அனைத்து
மாவட்டங்களிலும் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும்
திட்டத்தினை நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அரசு தொடக்கப்பள்ளியில் துவக்கி
வைத்தார். இதன்மூலம் தமிழகத்திற்கு உட்பட்ட ஊரக பகுதிகளை சேர்ந்த 31 ஆயிரம் அரசு
பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவ, மாணவியர்கள் பயன்பெறுவார்கள்.
இத்திட்டத்திற்காக ரூ.404 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்
மாணவ, மாணவியர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதேயாகும்.
இத்திட்டத்தின் நோக்கம் ஆரோக்கியமான வருங்கால சந்ததியினரை
உருவாக்கிடவும், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டினை நீக்கி அரசு பள்ளிகளில்
மாணவ, மாணவியரின் பள்ளி வருகையை அதிகப்படுத்துவதை உறுதி செய்வதேயாகும்.
காலை உணவு திட்டத்தின் வாயிலாக குழந்தைகளுக்கு பள்ளி வேலை நாட்களில் சேமியா,
வெண்பொங்கல், ரவை, கோதுமை ரவை உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்பட்டு
வருகிறது. உணவு வழங்குவதில் குறைபாடுகள் இருப்பதை கண்டறியப்படின் உடனடியாக
நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு மாவட்ட ஆட்சியாளர்
ஸ்ரீதர், தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர்,
பள்ளி குழந்தைகளிடம் காலை உணவு வழங்குவது குறித்து கேட்டறிந்தார்.
ஆய்வில் திட்ட இயக்குநர் (மகளிர் திட்டம்) பீபீ ஜாண், துறை சார்ந்த
அலுவலர்கள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.