கன்னியாகுமரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பாலசுப்பிரமணியம், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் கீதா ( வேளாண்மை) , தோட்டக்கலைத் துறை இணை இயக்குனர் ஷீலா ஜாண், வேளாண்மை இணை இயக்குநர் வாணி, பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ, விவசாயிகள் புலவர் செல்லப்பா, தாணுபிள்ளை, முருகேச பிள்ளை, அருள், தங்கப்பன், தேவதாஸ், ஜெனில் உட்பட விவசாயிகள் பலர் மற்றும் சம்மந்தப்பட்ட அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கடந்த மாதம் பெறப்பட்ட மனுக்களில் 36 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதை விவசாயிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டது. குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நிலங்களின் வளங்களும் ஆய்வு செய்யப்பட்டு ஆன்லைனில் உள்ளது. அளவீடு முடிந்த பணிகளில் எப்போது ஆக்கிரமிப்பு அகற்றப்படும். மாவட்டத்தில் உள்ள அணைகளில் ஏன் முழு கொள்ளளவு தண்ணீர் பிடிப்பதில்லை. பி.பி சானலில் 2 உடைப்புகள் ஏன் ஏற்பட்டது. வேளாண் அலுவலர்கள் இடமாற்றம் ஏன். கடலோரத்தில் இருந்து 15 கிலோ மீட்டருக்குள் குளங்கள் புனரமைப்பு திட்டத்தில் புதிய மதிப்பீடு தயாரிக்கும் போது ஏன் குறைவான குளங்கள் எடுக்கப்பட்டது. மாம்பழத்துறையாறு அணையில் உள்ள செடி கொடிகள் லைட்டுகள் ஏன் பராமரிக்கவில்லை. மலர் ஆராய்ச்சிக்கான இடத்தை வேறு துறைக்கு ஒதுக்க கூடாது. தேங்காய்க்கு எம்எஸ்பி குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும். சாலையாக அமைக்கப்பட்ட வாய்க்கால்களை மீண்டும் வாய்க்காலாக மாற்ற வேண்டும். சானலில் குறுக்கே அமைக்கப்பட்டு உள்ள பைப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல கேள்விகளை விவசாயிகள் கூட்டத்தில் கேட்டனர். விவசாயிகளின் ஒவ்வொரு கேள்விகளுக்கும் மாவட்ட ஆட்சியாளர் ஸ்ரீதர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் கேட்டு விளக்கமாக விவசாயிகளுக்கு பதில் அளித்து பேசினார்.